நண்பர்களே,
நெடுநாட்களாக பதிவிடாமல் இருந்தமைக்கு மன்னிக்க. சில பேர் மட்டும் என்னிடம் "மன்னிக்க மனமில்லை, மன்னிக்க" என்று கூட சொல்லலாம். என்ன செய்வது சாமி, நம்ம பொழப்பு அப்படி ஆகி விட்டது. அதனால் பழைய விஷயங்களை மறந்து விட்டு பதிவுக்கு செல்வோம். இனிமேல் முடிந்த அளவிற்கு என்னால் இயன்ற ஸ்பைடர் மற்றும் இரும்புக்கை மாயாவி கதைகளை உங்களுக்கு வழங்க முயற்சி செய்கிறேன். அதனைப் போலவே எனக்கு மிகவும் பிடித்தமான கோகுலம் மற்றும் பூந்தளிர் புத்தகங்களையும் சற்று அலசுவோம். என்ன சரிதானே?
இந்த பதிவு இனிமேல் வரப்போகும் அனைத்து ரெகுலர் பதிவுகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்கட்டும்.அதற்க்கு முன்பு இந்த செய்தித்தாளில் வந்த செய்தியை படியுங்கள்.
|
இதில் நான் கவனித்த விஷயம் ஒன்று: இதனை வாங்கியவர் காமிக்ஸ் பிரியர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நான் கூட எங்கே நம்ம காமிக்ஸ் பிரியரோ என்று நினைத்தேன். அவருக்கு மின்னஞ்சல் கூட அனுப்பினேன். ஆனால் அவர் இல்லை என்று நினைக்கிறேன்.
அந்த விஷயத்தை விடுங்கள். ரொம்பவும் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த புத்தக விற்பனை நடந்த மூன்று நாட்களிலேயே பேட்மேன் காமிக்ஸின் முதல் இதழ் ஐந்து கோடி ரூபாய்களுக்கு விற்கப்பட்டு மற்றுமொரு சாதனையை புரிந்தது. நமது ஊரில் மட்டும் அப்படி பழைய காமிக்ஸ் புத்தகங்களை விற்றால் ஏதோ ராணுவ ரகசியத்தை விற்கிற மாதிரி பேசுகிறார்கள். இவர்களுக்கு என்ன தெரியும் ஒரு பழைய புத்தகத்தை பேணிப்பாதுகாக்கிற வேலை என்பது ஏதோ சாதாரண விஷயம் இல்லை என்பது.
பழைய முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், அசோக் மேத்தா காமிக்ஸ் போன்றவற்றின் அட்டைப்படங்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவை. அவை எல்லாம் இப்போது கை பட்டாலே உடைந்து போய் விடும் அவற்றை காப்பது என்பது குதிரை கொம்பு போல. அவற்றின் மீது டேப் ஓட்ட வேண்டும், பிளாஸ்டிக் கவரில் போட்டு பாதுகாக்க வேண்டும், என்று பல விஷயங்கள் உள்ளன. அதுவில்லாமல் இவற்றை யாரும் மனமுவந்து விற்பது இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கடினமான சூழ்நிலை வரும்போதே விற்கிறார்கள். அதனால் விற்பவர்களை யாரும் குறை சொல்ல வேண்டாம். உங்களால் வாங்க முடியவில்லை என்றால் விட்டு விடலாம், உங்களை யாரும் வற்புறுத்துவது கிடையாதே?
இப்படி எல்லாம் என்னுடைய நண்பர்கள் சில பேர் என்னிடம் சொல்கிறார்கள். ஏதோ அவர்களின் மனக்குறையை அவர்கள் என்னிடம் சொல்லி தீர்த்துக் கொள்கிறார்கள். என்ன செய்வது?
ஆனால், புத்தக விற்பனையை வெறுக்கும் சிலர் "இப்படி ஒரு ருபாய், ரெண்டு ரூபாய்க்கு கிடைத்த புத்தகத்தை எல்லாம் ஐநூறு, ஆயிரம் என்று விற்பது அநியாயம்" என்று கூறுவதோடில்லாமல் விற்கும் சில நண்பர்களை பற்றி அவதூறாகவும் பேசுகிறார்கள். சிலர் இந்த காமிக்ஸ் விற்பனையை ஒரு கலையாகவே செய்வதாகவும் தகவல். அதனால் இரண்டு பக்கங்களிலும் கூர்ந்து கவனித்தால், அவசியம் என்றால் வாங்குங்கள், இல்லை என்றால் விட்டு விடுங்கள் என்பதே சரியான தீர்வாக தெரிகிறது.
இதனை பற்றிய உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.