Saturday, October 17, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள் - கோகுலம் ஒரு டீசர்


நண்பர்களே,

அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அடுத்த வாரம் தான் இந்த பதிவை இட எண்ணி இருந்தேன். ஆனாலும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி ந்நாளில் வாழ்த்துக்களை தெரிவிக்க எண்ணி இந்த டீசர் பதிவை இடுகிறேன். முழுமையான பதிவு மேலும் பல ஸ்கான்களுடன் விரைவில் வரும்.

நண்பர்கள் அனைவரும் முதன் முதலில் படித்த காமிக்ஸ் பற்றி கேட்டால் சற்று தடுமாறுவார்கள். கண்டிப்பாக முத்து காமிக்ஸ்/ராணி காமிக்ஸ்/லயன் காமிக்ஸ்/இதர.... இந்த லிஸ்ட்டில் இராது. சிலர் பூந்தளிர் முதலும், இன்னும் சிலர் முத்து வாரமலருடனும் கூட ஆரம்பித்து இருக்கலாம். அல்லது அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவற்றுடன் கூட இருக்கலாம். ஆனால் நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்த (இதனை காமிக்ஸ் என்று வகைப் படுத்த இயலாததால்) சிறுவர் இலக்கிய இதழ் கோகுலம் ஆகும்.

நான் மேலே கூறியவற்றில் பல இதழ்கள் இப்போது வருவதில்லை. பூந்தளிர் நின்று விட்டது, பாலமித்ரா கூட. ஆனால் அம்புலிமாமா மற்றும் கோகுலம் போன்ற இதழ்கள் இப்போது கூட வந்து கொண்டு தான் இருக்கின்றன. நம்மை போன்ற பல வருட வாசகர்கள் இப்போதும் கூட சில சமயங்களில் அதனை வாங்கி விடுகின்றனர். வேறென்ன செய்ய? பழைய பழக்கங்கள் அத்தனை சுலபத்தில் விட்டு விலகுவதில்லையே? ஆனால் நம்மை ஒரு காலத்தில் மதி மயங்க செய்த அந்த செப்பிடு வித்தைகள் இப்போது இந்த புத்தகங்களில் இல்லை. சிறுவர்களுக்கு இந்த கதைகள் தான் பிடிக்கும், இது போன்ற சித்திரக்கதைகள் தான் பிடிக்கும் என்று இவர்களே நினைத்துக் கொண்டு இவர்களின் மனம் போன போக்கில் கதைகளை தரம் பிரிக்காமல் வெளியிட்டு இந்த புத்தகங்களில் மதிப்பை தாழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் முப்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த இந்த ஒரு விளம்பரம்தான் சிறுவர் புத்தக உலகை மாற்றிய ஒன்றாகும். ஆம், கோகுலம் இதழின் விளம்பரம் இது. கல்கி இதில் வந்தது. ஓவியர் மாருதி அவர்களின் தூரிகை வண்ணத்தில் சிறார்களின் மனதை கவரும் விதத்தில் இல்லாமல் பெற்றோர்களின் மனதை கவரும் விதத்தில் அமைந்த இந்த விளம்பரம் ஒரு மைல் கல் ஆகும்.

 

gokulam 1st ad

இந்த இதழுடன் வந்த குட்டி பரிசு என்ன என்பதை அடியேனுக்கு யாராவது தெரியப் படுத்தினால் அகம் மகிழ்வேன். இதனைப் போலவே மற்றும் பல விளம்பரங்களை கல்கி இதழில் கொடுத்து அதன் மீது ஆர்வத்தை தூண்டினார்கள்.

gokulam 1974 ad

அடுத்த பதிவில் ஆரம்ப காலத்தில் வந்த கோகுலம் இதழ்களுடன் தற்போது வரும் கோகுலம் இதழ்களோடு ஒப்பிடுவதை செய்யாமல் கோகுலத்தினை நான்கு கால கட்டங்களில் பிரித்து ஆராய்வோம்.

 

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Thursday, September 3, 2009

The Spider ஸ்பைடர் லயன் காமிக்ஸ ஹீரோ

நண்பர்களே,

வணக்கம் சாமி, வணக்கம். இது என்னுடைய முதல் பதிவு என்பதால் எனக்கு மிகவும் பிடித்த காமிக்ஸ் ஹீரோ ஆகிய ஸ்பைடர் பற்றிய பதிவை போட்டு ஆரம்பிக்கிறேன். தொடரும் பதிவுகள் அனைத்தும் நான் விரும்பி படித்த தமிழ் சிறுவர் பத்திரிகைகளை பற்றியே இருக்கும். இந்த பதிவு ஒரு சாம்பிள் மட்டுமே. முழுமையான பதிவு பின்னொரு நாளில் வெளிவரும்.

தமிழ் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நண்பர் முத்து விசிறி அவர்களுக்கும், தமிழ் காமிக்ஸ் பற்றி ஒரு மாபெரும் மறுமலர்ச்சி கொண்டு வந்து பலரையும் பதிவர்களாக மாற்றி முழுமையான பதிவுகளை நமக்கு அறிமுகப்படுத்திய கிங் விஸ்வா அவர்களுக்கும் இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.இப்போது வெளி நாட்டில் இருக்கும் இந்த இருவருக்கும் என்னுடைய நன்றிகள்.

ஸ்பைடர் பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப் பட்ட ஒரு கற்பனை காமிக்ஸ் பாத்திரம். முதன் முதலில் ஒரு சூப்பர் வில்லன் ஆக இருந்த ஸ்பைடர் பின்னாளில் மனம் திருந்தி ஒரு சூப்பர் ஹீரோ ஆக மாறி குற்றம் செய்பவர்களுக்கு எதிராக போராடி வருகிறான். ஸ்பைடர் பாத்திரத்தை உருவாக்கியவர் பெயர் டேட் கொவான் மற்றும் சித்திரங்களை வரைந்தவர் ரெக் பன்.ஸ்பைடர் தொடரில் மூன்றாவது கதை முதல் உள்ளே நுழைந்து கதை எழுத ஆரம்பித்தவர் உலகப் புகழ் பற்ற சூப்பர்மேன் பாத்திரத்தை உருவாகிய ஜெர்ரி சீகல். பின்னர் இவரே பெரும்பான்மையான ஸ்பைடர் தொடர்களுக்கு கதையை உருவாக்கியவர்.

முதன் முதலில் ஸ்பைடர் கதை இங்கிலாந்தில் வெளிவந்த லயன் என்னும் காமிக்ஸ் வார இதழில் 1965 ஆம் ஆண்டு வந்தது. நான்கு ஆண்டுகள் தொடர்ந்து வந்த இந்த தொடர் பின்னர் 1976 வல்க்கன் இதழில் ரீபிரிண்ட் செய்யப் பட்டது. நடுவில் லயன் மற்றும் பிலீட்வே குழும பத்திரிக்கைகளில் சிறப்பிதழ்களில் சிறு கதைகள் வேறு வந்தது. இதை தவிர பிலீட்வே சூப்பர் சீரிஸ் என்னும் மாத இதழ்களில் வேறு முழு நீள கதைகளாக வந்தது.

ஸ்பைடர் பல்வேறு உலக நாடுகளில் பல மொழிகளில் வெளிவந்தது உள்ளது. ஜெர்மனியில் கோப்ரா என்ற பெயரில் வந்து மிகவும் புகழ் பெற்றது. இந்தியா, ஸ்பெயின் , இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வந்து சிறப்பாக வந்தது. ஸ்பைடர் தொடரை மீண்டும் உயிர்பிக்க பல முயற்சிகளின் எடுக்கப் பட்டன. ஆனால் இதில் யாரும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யாததால் அவை எல்லாமே அனைவராலும் வெறுக்கப் பட்டன. சமீபத்தில் டைட்டன் நிறுவனத்தினரால் ஸ்பைடரின் முதல் மூன்று கதைகள் ஒரு தொகுப்பாக ஒரே புத்தகமாக கொண்டு வரப் பட்டது. இவை இந்தியாவிலும் கிடைக்கின்றன. படித்து மகிழுங்கள் நண்பர்களே.

ஸ்பைடர் முதன் முதலில் தோன்றியபோது அவன் யார், அவனுடைய பின்புலம் என்ன என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் கொடுக்கப் பட வில்லை. அதனால் அவனை பற்றிய எந்த ஒரு மேலதிக தகவலும் இல்லை. ஆனால் அவனுடைய ஒரே எண்ணம் : தன்னிகரில்லாத குற்ற சக்கரவர்த்தி ஆவதே. அதற்காக அவன் ஒரு படையை உருவாக்கினான். அதில் பலர் இருந்தாலும் குறிப்பிடும் படியான இருவர் : புரபெஸ்ஸர் பெல்ஹாம் மற்றும் ராய் ஆர்டினி ஆகும். இந்த இருவருமே ஸ்பைடருடன் பல கதைகளில் தோன்றுகின்றனன்ர்.

ஸ்பைடருக்கு என்று சில பல வித்தியாசமான ஆயுதங்கள் உள்ளன. உதாரணமாக எக்கு போன்ற உறுதியான இழைகளை கக்கும் வலை துப்பாக்கி, மயக்க வைக்கும் வாயுத் துப்பாக்கி போன்றவை மிகவும் புகழ் பெற்றவை. இவை ஸ்பைடருக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது இவற்றின் சிறப்பு அம்சமாகும். இதை தவிர ஹெலி கார் என்று ஒரு பறக்கும் கார் தான் ஸ்பைடரின் வாகனம் ஆகும். இந்த ஹெலி கார் ஸ்பைடரின் குரலுக்கு மட்டுமே கட்டுப்பட்டு செயல் படும் என்பதும் ஒரு விந்தையான விஷயம். ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பழைய கோட்டையின் ஒவ்வொரு கற்களாக பெயர்த்து எடுத்து வந்து கட்டப் பட்ட ஒரு மாபெரும் மாளிகையே ஸ்பைடரின் இருப்பிடம் ஆகும். இந்த மாளிகை எதிரிகள் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். இந்த மாளிகையில் பல நுட்பமான இயந்திரத் பொறிகள் பொருத்தப் பட்டு இருக்கும்.

குற்ற உலகில் ஸ்பைடர் சந்தித்த எதிரிகள்.......... அப்பப்பா எத்தனை பயங்கரமானவர்கள் மற்றும் எத்தனை வித்தியாசமானவர்கள். கண்ணாடி மனிதன், மிஸ்டர் மர்மம், இயந்திர பொம்மைகளின் பேரரசன், மரண மாஸ்டர், பாதாளப் போராட்டம் நடத்திய மிஸ்டர் நெமோ, ராட்சச குள்ளன், டாக்டர் ஆர்கோ, சைத்தான் புரபெஸ்ஸர், விண்வெளி பிசாசு, கோப்ரா தீவின் விந்தைகள், சிவப்பு தளபதி, இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவை அனைத்துக்கும் உயர்ந்த கதைகள் என்றால் இரண்டே இரண்டு மட்டும் நினைவில் வருகின்றன. ஒன்று: நீதிக் காவலன் ஸ்பைடர். இந்த கதையில் தான் குற்ற உலகின் அனைத்து கிரிமினல்களும் ஒன்றாக இணைந்து ஸ்பைடருக்கு எதிராக இணைந்து ஒரு மாபெரும் எதிரியை உருவாக்குகின்றனர்.

ஸ்பைடாரே தோற்றுப் போகும் ஒரு சூழ்நிலை ஏற்படுவது இந்த கதையில் தான். ஆனால் தன்னுடைய மதி நுட்பத்தால் ஸ்பைடர் இந்த எதிரியை வென்று வருவதோடில்லாமல் நீதிக் காவலனாக வேறு மாறி விடுகிறான். அதனால் தான் இந்த கதை மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இரண்டாவது கதையை பற்றி தனி பதிவாக இடுகிறேன்.

சமீபத்தில் இல்வாழ்க்கை பந்தத்தில் இணைந்த நண்பர் அய்யம்பாளையம் அவர்களுக்கு வாழ்த்துக்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். நண்பரே, உமக்கு என்னுடைய தனிப் பட்ட வாழ்த்துக்கள்.