நண்பர்களே,
அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அடுத்த வாரம் தான் இந்த பதிவை இட எண்ணி இருந்தேன். ஆனாலும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி ந்நாளில் வாழ்த்துக்களை தெரிவிக்க எண்ணி இந்த டீசர் பதிவை இடுகிறேன். முழுமையான பதிவு மேலும் பல ஸ்கான்களுடன் விரைவில் வரும்.
நண்பர்கள் அனைவரும் முதன் முதலில் படித்த காமிக்ஸ் பற்றி கேட்டால் சற்று தடுமாறுவார்கள். கண்டிப்பாக முத்து காமிக்ஸ்/ராணி காமிக்ஸ்/லயன் காமிக்ஸ்/இதர.... இந்த லிஸ்ட்டில் இராது. சிலர் பூந்தளிர் முதலும், இன்னும் சிலர் முத்து வாரமலருடனும் கூட ஆரம்பித்து இருக்கலாம். அல்லது அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவற்றுடன் கூட இருக்கலாம். ஆனால் நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்த (இதனை காமிக்ஸ் என்று வகைப் படுத்த இயலாததால்) சிறுவர் இலக்கிய இதழ் கோகுலம் ஆகும்.
நான் மேலே கூறியவற்றில் பல இதழ்கள் இப்போது வருவதில்லை. பூந்தளிர் நின்று விட்டது, பாலமித்ரா கூட. ஆனால் அம்புலிமாமா மற்றும் கோகுலம் போன்ற இதழ்கள் இப்போது கூட வந்து கொண்டு தான் இருக்கின்றன. நம்மை போன்ற பல வருட வாசகர்கள் இப்போதும் கூட சில சமயங்களில் அதனை வாங்கி விடுகின்றனர். வேறென்ன செய்ய? பழைய பழக்கங்கள் அத்தனை சுலபத்தில் விட்டு விலகுவதில்லையே? ஆனால் நம்மை ஒரு காலத்தில் மதி மயங்க செய்த அந்த செப்பிடு வித்தைகள் இப்போது இந்த புத்தகங்களில் இல்லை. சிறுவர்களுக்கு இந்த கதைகள் தான் பிடிக்கும், இது போன்ற சித்திரக்கதைகள் தான் பிடிக்கும் என்று இவர்களே நினைத்துக் கொண்டு இவர்களின் மனம் போன போக்கில் கதைகளை தரம் பிரிக்காமல் வெளியிட்டு இந்த புத்தகங்களில் மதிப்பை தாழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் முப்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த இந்த ஒரு விளம்பரம்தான் சிறுவர் புத்தக உலகை மாற்றிய ஒன்றாகும். ஆம், கோகுலம் இதழின் விளம்பரம் இது. கல்கி இதில் வந்தது. ஓவியர் மாருதி அவர்களின் தூரிகை வண்ணத்தில் சிறார்களின் மனதை கவரும் விதத்தில் இல்லாமல் பெற்றோர்களின் மனதை கவரும் விதத்தில் அமைந்த இந்த விளம்பரம் ஒரு மைல் கல் ஆகும்.
இந்த இதழுடன் வந்த குட்டி பரிசு என்ன என்பதை அடியேனுக்கு யாராவது தெரியப் படுத்தினால் அகம் மகிழ்வேன். இதனைப் போலவே மற்றும் பல விளம்பரங்களை கல்கி இதழில் கொடுத்து அதன் மீது ஆர்வத்தை தூண்டினார்கள்.
அடுத்த பதிவில் ஆரம்ப காலத்தில் வந்த கோகுலம் இதழ்களுடன் தற்போது வரும் கோகுலம் இதழ்களோடு ஒப்பிடுவதை செய்யாமல் கோகுலத்தினை நான்கு கால கட்டங்களில் பிரித்து ஆராய்வோம்.
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தீபாவளி நல்வாழ்த்துக்கள்.